மெய்யடியார்களே!
பேர்லின் இந்து மகாசபையினதும் அதனால் நிர்வகிக்கப்படும் பேர்லின் மயூரபதி முருகன் ஆலயத்தினதும் சிறப்பியல்புகள்.
வேறெங்கும் இல்லாத வகையில் -ஆனால் சங்கத்தமிழர் மரபில் பேர்லின் இந்து மகாசபையானது சாட்சாத் முருகப்பெருமானையே தலைவராகக் கொண்டு இயங்குகிறது. முருகப் பெருமானே பெருந்தலைவராயிருக்க அவர் பணியை நிறைவேற்ற முன்வரும் நிர்வாகிகள் ஒரே மனத்துடனும் அர்ப்பணிப்புடனும் சம உரிமையுடனும் அணுக்கத்தொண்டராய்ச் செயற்பட சீரிய களமாய் இந்நிலை அமைகிறது.
இறையருளை முன்னிறுத்தி ஆலயக்கடமைகளை ஆற்றுவதன் மூலம் நானெனும் ஆணவம் குறையும். அதனால் அவர் ஆற்றும் கடமைகள் யாவும் ஆண்டவனின் ஆசிபெறுவதுடன் சகலருக்கும் ஆனந்தமளிக்கும் சிறந்த தொண்டாக மிளிரும். ஆலயம் சிறக்கும். அதனால் அங்கு வழிபடும் அடியார் உயர்வடைவர்- ஊரும் உலகும் உய்யும்.
இப்பெருநோக்குடன் முன்மாதிரியாக இறையருளால் உருவாக்கப்பட்ட இந்நிலையை இந்துமகா சபையினர் மட்டுமன்றி உலகெங்கும் ஆலயம் அமைத்து நிர்வகிப்போர் அனைவரும் உணர்ந்து பின்பற்றி ஊக்கமளித்தல் உலகுக்கே நலம் பயக்கும். அந்தவகையில் பேர்லின் இந்து மகாசபை ஒரு முன்மாதிரியாகும்.
முருகப்பெருமான் ஆகிய பெருந்தலைவரின் தலைமையில் செயல்புரிய உலக சட்டதிட்டங்களுக்கமையவும் ஆத்மார்த்த நெறிமுறைகளுக்கு முரண்படாமலும், இந்துமகாசபை, உபவிதிகள் அடங்கிய யாப்பு ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. அந்த யாப்பு ஆர்வமுள்ள பல சமூகவாதிகளுடனும் சமயப் பற்று மிகுந்தோருடனும் கலந்து பேசிப் பெறப்பட்ட கருத்துக்களாலும் தமிழ் இந்துக்களின் கடந்த கால அனுபவங்களாலும் இறை அருளாலும் உருவாக்கப் பட்டுள்ளது.
பேர்லின் மாநகரில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ள இந்துக்கள் எவரும் அங்கத்துவம் பெறும் பேர்லின் இந்து மகாசபை தனது செயற்பாட்டுக்காக இரண்டு வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கியுள்ளது. நிர்வாக சபை – போசகர் குழு என அவை அழைக்கப்படும். நிர்வாகசபை 11 பேர் கொண்டது. போசகர் குழு 5 பேர் கொண்டது.
நிர்வாகசபை வருடந்தோறும் தெரிவுசெய்யப்படும் அதேவேளை போசகர் குழு மூன்று வருடத்துக்கு ஒரு முறை பொதுச்சபையினால் தெரிவு செய்யப்படும். நிர்வாக சபையே ஆலய நிர்வாகத்தை நடத்தும்.
போசகர்குழு அவர்களுக்கு வேண்டிய சகல ஒத்துழைப்பையும் நல்கும். நிர்வாகசபைக் கூட்டங்களிற் பங்குபற்றி ஆலோசனை கூறவும் வழிநடத்தவும், தேவை ஏற்படின் சபையைக் கலைத்துப் புதிய நிர்வாகிகளைத் தெரிந்தெடுத்து தொடரவும் போசகர்குழு பயன்படும். ஆகையால் போசகர்குழுவில் கடமை புரிய விரும்புவோர் அதற்கான முதிர்ச்சியும் அறிவாற்றலும் உள்ளவராய் இருக்கவேண்டியது அவசியமாகிறது. இங்கே இச்சபைகளில் பணியாற்ற விரும்புவோர் (தாங்கள் தெரிவு செய்திருக்கும் பதவிக்கான தகமைகளைக் கொண்டிருப்பதோடு) தங்கள் சுயவிருப்பத்தினை விண்ணப்பப் படிவத்தில் உறுதி செய்யவேண்டும். இதனால் வேறுபட்ட திறமைகள் ஆலயவளர்ச்சிக்கு பயன்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
ஓரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் தருணத்தில் பொதுச்சபையில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர். அதனால் ஒருவருடைய தன்னார்வமும் முருகப்பெருமானின் ஒப்புதலும் ஒன்றுசேர்ந்தே ஒருவர் பதவி நிர்ணயிக்கப்படுகிறது. ஆக – இங்கு தெரிவுசெய்யப்படுவோர் எல்லோரும் முருகப்பெருமானின் நேரடிக் கண்காணிப்புக்கும் பயிற்சிக்கும் அருகதையுள்ளவராகவே கருதப்படுவர். அதனால் அவர்கள் ஆத்மீகசட்டதிட்டங்களுக்கு அமைவாக செயலாற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். தெரிவு முடிந்தபின் போசகர் குழுவினரும் நிர்வாகசபையினரும் ஒன்றுகூடி முருகப் பெருமான் சந்நிதியில் பதவியேற்புச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்வர்.
அப் புனிதப் பிரதிக்ஞை ஒவ்வொரு நிர்வாகக் கூட்ட ஆரம்பத்திலும் எல்லோராலும் ஒப்புவிக்கப்படும்.
_________________________________________________________________________
புனிதப் பிரதிக்ஞை
மயூரபதி முருகப்பெருமான் தாமே தலைவராயிருந்து நடாத்தும் பேர்லின் இந்துமகாசபையின் ______ ஆம் ஆண்டுக்கான செயற்குழுவில் எம்பெருமான் திருவுள்ளத்தின்படி அங்கம் வகிக்கும் நாம் எல்லோரும் உண்மை நேர்மை வழியில் ஆணவம் வெறுப்பு சினம் தவிர்த்து – அன்பு பணிவு அடக்கம் பொறுமையுடன் இணக்கமாக இன்சொல் பேசி ஒரேமனமாய் இனிய தொண்டுள்ளத்துடன் – மேற்படி சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய பயபக்தியுடன் செயற்படுவோம் என எம்பெருமான் துணைவேண்டி இத்தால் உறுதி பூணுகின்றோம்.
கையொப்பங்கள்: ____ ____ ____ ____ ____ ____ ____
_________________________________________________________________________
இறைபணி என்பது தன்னை இழந்து தரணி வாழச் செயற்படவேண்டிய உத்தம பணி. அதனை நிறைவாகவும் சிறப்பாகவும் ஆற்ற, ஒருவர் அந்தத் துறையில் ஆர்வமும் திறமையும் உடையவராய் இருக்கவேண்டும்.
சிறப்பாக மற்றெந்த சமுகச் செயற்பாடுகளிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படாத இறைபக்தியும், தன்னலங் கருதாமையும் பணிவும் அடக்கமும், பண்பட்ட பழக்க வழக்கங்களும் மேன்மையான சிந்தனையும் கொண்டவராய் இருத்தல் அவசியம்.
அத்தகைமைகள் யாவுங்கொண்ட ஒருவர் இறையருளுங்கூடிவரும் நிலையில் செய்யுங் கடைமைகள் நிச்சயம் மேன்மையானவையாகவே அமையும்.அத்தகைய பெரும் பேறுபெற்ற நிலையை உலகே அடைந்துய்ய, பேர்லின் இந்து மகாசபை முருகப்பெருமான் அருளால் வழிகாட்டுகின்றது.
ஏற்று நடந்து உய்தல் உலக இந்துக்களின் கையில் !!!
சுபம்